நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! - News View

Breaking

Post Top Ad

Friday, December 25, 2020

நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், சுகவீனமுற்ற நிலையில் அங்குள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த 03ஆம் திகதி வெளியிட்டார். அப்போது புதிய கட்சியை தொடங்குவது பற்றி வருகிற 31ஆம் திகதி அறிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக ‘அண்ணாத்த’ படத்தை முடித்து கொடுக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக தங்கி இருந்த ரஜினி தினமும் 9 மணி நேரம் வரையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு அரசியலில் தீவிரம் காட்ட ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார். வருகிற 29ஆம் திகதி சென்னை திரும்பி 31ஆம் திகதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவும் அவர் முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) மேற்கொண்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஐதராபாத்திலேயே ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

வைத்தியர்களின் ஆலோசனைப்படி ஐதராபாத்திலேயே இருந்த ரஜினிகாந்த் 3 நாளில் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது ரஜினிக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லையென்றாலும் அவருடைய இரத்த அழுத்தத்தில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதாகவும் அது தொடர்பாக மேலும் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருப்பதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலையறிந்து ஹைதராபாதில் உள்ள அவரது ரசிகர்கள் மருத்துவமனை வெளியே திரண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad