எதையும் மறைக்காது உண்மையைக் கூறுங்கள், கொத்தணிக்கு இடமளியாதீர்கள் - யாழ். மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

எதையும் மறைக்காது உண்மையைக் கூறுங்கள், கொத்தணிக்கு இடமளியாதீர்கள் - யாழ். மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள்

யாழ். குடாநாட்டில் புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும். அவர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இதைவிடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை போல பெரிய கொத்தணியையோ அல்லது அக்கரைப்பற்று போல் சிறிய கொத்தணியையோ யாழ். குடாநாட்டிலும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று இராணுவத் தளபதியும் கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

யாழ். மருதனார் மடத்தில் திடீரென கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.

வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையைச் செய்ய வேண்டும். அவருடன் பழகிய அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

இந்த விடயத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும், சுகாதாரப் பிரிவினர் மற்றும் படையினரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment