ஆப்கானிஸ்தான் வான் தாக்குதல்களில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 700 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்த போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த வான் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களே பெருமளவு கொல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வான் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிர் இழப்பது 330 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 700 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 இல் செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற அமெரிக்காவின் படையெடுப்பின் முதல் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.
அதேபோல் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தான் ராணுவம் மட்டும் நடத்திய வான் தாக்குதல்களில் 86 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2017 இல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதன் காரணமாகவே வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு, இது தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரியில் தலிபான்களுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டிய அமெரிக்கா அதன் வான் தாக்குதல்களில் இருந்து வாபஸ் பெற்றது. நாட்டில் உள்ள தமது துருப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அமெரிக்கா இணங்கியது.
No comments:
Post a Comment