முறையான மதிப்பீடின்றி மக்களை சென்றடையும் மருந்துகள் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் - அரச ஆயுர்வேத மருந்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

முறையான மதிப்பீடின்றி மக்களை சென்றடையும் மருந்துகள் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் - அரச ஆயுர்வேத மருந்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா) 

கொவிட் தடுப்பிற்கானவை எனக் கூறப்படும் தேசிய அல்லது ஆயர்வேத மருந்துகள் முறையான மதிப்பீடின்றி மக்களை சென்றடையுமாயின் அது சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே ஆயர்வேத திணைக்களம், தேசிய மருத்துவ அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன அவை தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதோடு மதிப்பீட்டினையும் செய்ய வேண்டும் என அரச ஆயுர்வேத மருந்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரசாத் ஹெந்தா விதாரன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தேசிய மற்றும் ஆயர்வேத மருத்துவ முறைகளுக்கு அமைய இடைக்கிடை மருந்துகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மருந்துகளை வெளிப்படுத்துபவர்களுக்கு நாம் ஒரு விடயத்தை தெளிவாகக்கூற விரும்புகின்றோம். 

ஏதேனுமொரு தேசிய மருந்து அல்லது ஆயுர்வேத மருந்தினை தயாரித்தால் அதனை ஆயுர்வேத திணைக்களத்தில் அல்லது ஆயுர்வேத மருந்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம் வழங்குமாறு அறிவுறுத்துகின்றோம்.

அதற்கு பதிலாக சமூக வலைத்தளங்கள் அல்லது ஊடகங்களின் ஊடாக இவ்வாறான மருந்துகளை சமூகமயப்படுத்துவதன் மூலம், மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வார்களாயின் அவர்களது பணம், காலம், சுகாதார நலன் என அனைத்தும் அபாயத்திற்குள்ளாகும். 

இவ்வாறான மருந்துகளின் பின்னால் ஓட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். மக்கள் நினைத்தவாறு அவற்றை கொள்வனவு செய்வதையும் உட்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கதிமாக உட்கொள்ளும் மருந்துகள் நிச்சயம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒரு ஒழுங்கு முறைக்கமைய இவற்றை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

மாறாக அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் அவற்றை உட்கொள்வதால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை மக்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று மருந்துகள் தொடர்பில் அநாவசிய பிரசாரங்களில் ஈடுபடுபவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

இவ்வாறான தேசிய மருந்துகள் தொடர்பான கண்டுபிடிப்புக்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் மக்களை சென்றடைய வேண்டும். அவ்வாறில்லை என்றால் பாரிய சுகாதார நெருக்கடி ஏற்படும். 

எனவே ஆயுர்வேத திணைக்களம், தேசிய மருத்துவ அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஆயுர்வேத அல்லது தேசிய மருந்துகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதோடு அவை தொடர்பில் மதிப்பீட்டினையும் செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad