(க.பிரசன்னா)
நீதியமைச்சின் தற்போதைய கட்டிடத்தை மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தேவைகளுக்கு வழங்குவதற்காக, நீதியமைச்சினை உலக வர்த்தக மையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீதியமைச்சினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய நீதியமைச்சின் கட்டிடம் கொழும்பு 14, ஹல்ப்ட்ஸ்டாரப் பகுதியில் அமைந்துள்ளது.
நீதியமைச்சினை உலக வர்த்தக மையத்திற்கு இடமாற்றுவதற்கு இரண்டு வருட வாடகையாக 200 மில்லியன் ரூபா செலவளிக்கப்படவுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் செயயற்பாடுகளுக்கு மேலதிக இடத்தினை வழங்குவதற்காகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு உலக வர்த்தக மையத்திலுள்ள 35,071 அடி பரப்புள்ள பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. இப்பகுதிக்கான முதல் ஆண்டு வாடகையாக வரிகளற்ற வகையில் 115,734,000 ரூபாவும் இரண்டாம் வருட வாடகையாக வரிகளற்ற வகையில் 121,205,376 ரூபாவும் செலுத்தப்படவுள்ளது.
எனினும் சேவைக் கட்டணங்கள் இவற்றில் உள்ளடக்கப்படவில்லை. அந்த வகையில் சேவை கட்டணங்களாக முதல் ஆண்டுக்கு 32,826,456 ரூபாவும் இரண்டாவது ஆண்டுக்கு 32,826,456 ரூபாவுமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக அலுவலக செலவுகளுக்காக வரிகளற்ற தொகையாக 17,100,000 ரூபாவும் இரண்டு திருப்பிச் செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புகளான 38,507,958 ரூபா மற்றும் 2,000,000 ரூபா உள்ளடக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு குறித்த கட்டிடத்தை வழங்குவதற்கும் நீதிபதிகளுக்கான தனியான நீதிமன்றங்களும் அறைகளும் தேவைப்படுவதால் இடமாற்றம் இடம்பெறுவதுடன் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலிருந்து நிதியமைச்சினை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டதால் நீதிச் சேவைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்கு பரிந்துரைத்திருந்தது.
தற்போது நீதியமைச்சு தற்காலிகமாகவே இடமாற்றப்படுவதாகவும் நீதியமைச்சுக்கான புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதாகவும் நீதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment