(இராஜதுரை ஹஷான்)
புகையிரத திணைக்கள சேவையில் 8000 ஆயிரம் தொழில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அவற்றில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் மாத்திரம் 366 வெற்றிடங்கள் காணப்படுவதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது புகையிரத சேவையில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காண புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்க வில்லை.
புகையிரத திணைக்களத்தில் தற்போது 23000 பேர் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இருப்பினும் 8000 சேவை பிரிவுகளுக்கு இன்னும் வெற்றிடம் நிலவுகிறது.
இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். படித்த இளைஞர்களை புகையிரத சேவையில் இணைத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் இதுவரை முன்னெடுக்கவில்லை.
புகையிரத திணைக்களத்தில் 9 சேவை பிரிவுகள் காணப்படுகின்றன. புகையிரத உப போக்குவரத்து திணைக்கள சேவையில் 3000 ஆயிரம் வெற்றிடங்களும், புகையிரத நிலைய தூய்மைப்படுத்தல் சேவை பிரிவில் 320 வெற்றிடங்களும், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் 366 வெற்றிடங்களும் நிலவுகின்றன. இவ்வாறாக புகையிரத சேவை வழங்கும் பிரிவுகளிலும் வெற்றிடங்கள் உள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை புகையிரத சேவையில் முழுமையாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
குறைவான சேவையாளர்களை கொண்டு புகையிரத சேவையை வினைத்திறனாக முன்னெடுக்க பல தடைகள் காணப்படுகின்றன. புகையிரத சேவையில் படித்த இளைஞர்களை விரைவில் இணைத்துக் கொள்ள புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment