கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுப்பு

கொரோனா நிவாரண மசோதாவில் தான் கையெழுத்திட போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மசோதாவில் திருத்தங்களை கொண்டு வரும்படி நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் நாடான அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்த நாட்டின் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விரைவில் இந்த மசோதா ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. டிரம்ப் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும்.

ஆனால் இந்த மசோதாவில் தான் கையெழுத்திட போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், மசோதாவில் திருத்தங்களை கொண்டு வரும்படி நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது இந்த மசோதா முற்றிலும் தேவையற்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மசோதாவால் வெளிநாடுகள் அதிக அளவில் பலன் பெறும். ஆனால் கொரோனாவுடன் போராடிவரும் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கும். எனவே இந்த மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரணமாக 600 டொலர் வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம் டொலராக அதிகரிக்கும்படி நான் நாடாளுமன்றத்தை வலியுறுத்துகிறேன். 

மேலும் இந்த மசோதாவில் உள்ள வீணான மற்றும் தேவையற்ற அம்சங்களை நீக்கிவிட்டு ஒரு பொருத்தமான மசோதாவை எனக்கு அனுப்பும்படி நான் நாடாளுமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad