திருகோணமலைக்கு வருவதை தவிர்க்கவும், விசேட பாதுகாப்பு திட்டத்தை நடுமுறைப்படுத்தவும் - கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

திருகோணமலைக்கு வருவதை தவிர்க்கவும், விசேட பாதுகாப்பு திட்டத்தை நடுமுறைப்படுத்தவும் - கிழக்கு மாகாண ஆளுநர்

கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என, சுகாதாரப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதால், அத்தியவசிய காரணங்களை விடுத்து, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் விடுமுறை நாட்களில், பயண நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்துமாறு, ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான முடிவுகளை எடுக்கும் மாகாண குழுக் கூட்டம் இன்று (23) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையில், ஆளுநர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் திருகோணமலை நகரில் விசேட பாதுகாப்பு திட்டத்தை நடுமுறைப்படுத்துமாறு, பாதுகாப்பு பிரிவினருக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார். 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் எவராக இருந்தபோதிலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு, பாதுகாப்பு பிரிவினரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன். திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு தெரிவித்த அவர், தற்போது காணப்படுகின்ற சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் பாதுகாப்புப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், மாகாண பிதான செயலாளர் துசித பீ வணிகசிங்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாடிகோராள, ஆளுநரின் செயலாளர் எல்.பீ. மதனநாயக்க, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரன், முப்படை மற்றும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment