தொடர்ந்து இரு தினங்களுக்கு விசேட சுற்றிவளைப்பை மேற்கொள்ள தயாராகும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

தொடர்ந்து இரு தினங்களுக்கு விசேட சுற்றிவளைப்பை மேற்கொள்ள தயாராகும் பொலிஸார்

(செ. தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் நாளையும் நாளை மறுதினமும் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக ஏற்கனவே 1927 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 1800 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1927 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 1800 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அவர்களின் பலர் குற்றத்தை ஏற்றுக் கொண்டும் உள்ளனர். இதன்போது பலரிடம் அபராத பணமும் அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் விருந்துபசாரங்களில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராக இதன்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அதனால் எந்த நிகழ்வுகளாக இருந்தாலும், தமது குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து தங்களது வீடுகளிலேயே கொண்டாடுங்கள். இந்நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என வலியுறுத்தினார்.

இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை முதல் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் பௌத்தர்கள் மட்டுமன்றி ஏனைய மதங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்வார்கள். 

இந்நிலையில், இம்முறை யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். 

இது தொடர்பில் பிரதேச சுகாதார பிரிவினரால் சுற்றுநிரூபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்நிலையில், சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் சோதனைச்சாவடிகள் மற்றும் பொலிஸ் நடமாடும் சேவை, மோட்டார் சைக்கிள் சேவை என்பன கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இதன்போது, கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார் அங்குள்ளவர்களின் விபரங்களை வினவினால் உண்மை விபரங்களை மாத்திரமே தெரிவிக்க வேண்டும். 

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் இந்த யாத்திரையில் கலந்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

No comments:

Post a Comment