சிறைச்சாலை நெருக்கடியை போக்க பொருத்தமான திட்டம் அவசியம் - முன்வைக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

சிறைச்சாலை நெருக்கடியை போக்க பொருத்தமான திட்டம் அவசியம் - முன்வைக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் பொருத்தமான திட்டமொன்றை தயாரித்து முன்வைக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன, அது தொடர்பில் தெரிவிக்கையில், இத்திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கிடையில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழ்நிலை காரணமாக சிறைக் கைதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பல தரப்புகளிலிருந்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதற்கிணங்க நேற்றைய தினம் பொருத்தமான திட்டமொன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

அதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்டு காயமடைந்தவர்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 104 ஆக உள்ள நிலையில் காயமடைந்தவர்களில் சிறைச்சாலை தாதி ஒருவர் மற்றும் மருத்துவ ஆலோசகர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மேற்படி சிறைக் கைதிகளில் 38 பேருக்கு நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment