மீனவர், விவசாயிகள் சார்பாக பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பினார் செல்வம் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

மீனவர், விவசாயிகள் சார்பாக பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பினார் செல்வம் எம்.பி

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புரவி புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக கட்டிட இடிபாடுகள், மீன் பிடி படகுகள், இயந்திரங்கள், வலைகள், கடல் உபகரணங்கள், விவசாயம், சொத்துக்கள், உடைமைகள், குடியிருப்புகள் சேதமடைந்தும் காணாமலும் போயுள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய விவசாயிகளினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் எவ்வாறு இந்த சூழ் நிலையிலிருந்து மீள முடியும்?.

எனவே இந்த மக்களின் அவல நிலையைப் பார்க்கவும், இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தவும் உதவுமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment