விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் புதிய அரசியலமைப்பு வரைவை சமர்ப்பிக்கும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் புதிய அரசியலமைப்பு வரைவை சமர்ப்பிக்கும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

(ஆர்.ராம்)

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் அடங்கிய வரைவினை தனியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கூட்டணியின் பங்காளிக் கட்சியான மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரைவானது தமிழ் மக்கள் பேரவை, வட மாகாண சபை ஆகிய தரப்பினரால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டங்களையும், சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்படும் வரைவினையும் மற்றும் பங்காளிக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் ஒன்றிணைத்து மேம்பட்டதாக இறுதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்புக்கான வரைவினை தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதற்காக ஐவர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரைவொன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கடந்த 22ஆம் திகதி வரையில் அவர்களுடைய அணியால் தயாரிக்கப்படும் யாப்பு தொடர்பில் இறுதியான முடிவொன்றை எடுப்பதற்கான கால அவகாசத்தினைக் கோரியிருந்தார்.

அதன் பின்னர், கூட்டமைப்பின் தலைமை மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரிக்கப்பட்டுள்ள அவர்களின் வரைவுக்கு அங்கீகாரமளித்துள்ளதாகவும் விரைவில் அது கையளிக்கப்படவுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் ஊடாக அறிய முடிந்துள்ளது.

அதேநேரம், இன்னமும் சொற்பமாக காலம் இருக்கின்ற நிலையில் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் வரைவு தயாரிப்பது பற்றிய கலந்துரையாடலை முன்னெடுத்திருக்கவில்லை.

இதன் காரணமாக, நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக முன்மொழிவுகள் அடங்கிய வரைவினை இறுதி செய்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

அந்த வரைவு நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவே அமையும். வரைவினை நிபுணத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் நாம் பகிரங்கப்படுத்துவோம்.

No comments:

Post a Comment