ஹொங்கொங்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொலிஸ் தலைமையகம் முன்பு சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்திய ஜனநாயக சார்பு தலைவர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அங்கு சீன அரசுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் ஒட்டு மொத்த ஹொங்கொங்கையே ஸ்தம்பிக்க வைத்தது. இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
இதையடுத்து ஹொங்கொங்கில் வரும் காலங்களில் இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்க சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அண்மையில் அமுல்படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ் சீன அரசுக்கு எதிரான ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹொங்கொங் பொலிஸ் தலைமையகம் முன்பு சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களான ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ் சோவ் ஆகிய 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் அவர்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று (3) இந்த வழக்கில் அவர்களின் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜோசுவா வோங்குக்கு 13½ மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதேபோல் ஆக்னஸ் சோவுக்கு 10 மாதங்களும், இவான் லாமுக்கு 7 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment