30 குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்ததாக கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

30 குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்ததாக கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை

புதிதாக பிறந்த 30 குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்ததாக  தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைதான, மாத்தளை, உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (23) மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர், குழந்தைகளை தலா ஒன்றரை முதல் 3 இலட்சம் ரூபாவிற்கு விற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரர் DIG அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான அல்லது ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாத நிலையில், அப்பெண்களுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து, சந்தேகநபர் அவர்களது குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்றதன் மூலம் ஆட் கடத்தலை மேற்கொண்ட குற்றத்தை புரிந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, அதன் அதிகாரிகள் கடந்த 08 ஆம் திகதி மொரட்டுவ பகுதியில் சந்தேகநபரால் நடாத்திச் செல்லப்படும் இடங்களுக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல நாட்களாக தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு குறித்த பெண்களை பராமரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த, ஹல்துமுல்ல, சி.பீ. டி சில்வா மாவத்தை மற்றும் மொரட்டுவை, தஹம் மாவத்தை ஆகிய இரு இடங்கள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், குறித்த நபரால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட 12 கரப்பிணிகள் அங்கிருந்ததோடு, அவர்களில் 5 பேரின் குழந்தைகள் 3ஆம் தரப்பினரால் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் முதல் சந்தேகநபர் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளதோடு, அவரிடமிருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment