வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரண்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கன மழை பொழிந்து வருகின்றது.
கனமழை காரணமாக மாவட்டத்தில் அனேகமான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது.
இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம், மற்றும் ஏம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்பட்டுள்ளமையால் அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.
மேலும் இலுப்பைக் குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும், ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment