ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் முதல்கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஆனாலும், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவின் உதவியுடன் தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசு - தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு தரப்புக்கும் தலிபான் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல் கட்டமாக வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது.
இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவை ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளாக தலிபான் அமைப்பு தற்போது வரை ஏற்கமறுத்து வருகிறது.
இதனால், அமைதி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்காமல் செல்லலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment