விசாரணைக்குழு இன்று மஹர சிறைக்கு - 26 பேரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

விசாரணைக்குழு இன்று மஹர சிறைக்கு - 26 பேரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் இன்று (03) சிறைச்சாலையை ஆய்வு செய்ய உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ஆளும்கட்சி பிரதம கொரடா ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோரும் இது குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் ஒருகொடவத்த பகுதியில் வைத்து, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (02) இரவு 9.00 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக சிறைச்சாலை ஆணையாளர், துஷார உபுல்தெனியா தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (29) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 26 பேரிடமிருந்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

மஹர அமைதியின்மை சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததோடு, மேலும் 106 கைதிகள் மற்றும் இரண்டு சிறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment