(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த ஆட்சியில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் 6,682 வீடுகள் இன்னமும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. இவற்றை முழுமைப்படுத்த 2,987.53 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றது. இதற்கான நிதியை பிரதமர் பெற்றுத்தருவாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.
2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதற்கான நிதி வழங்கப்படும் என பிரதமர் மற்றும் அரச தரப்பினர் சபையில் வாக்குறுதியளித்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆட்சியில் 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச அவர்களின் காலத்தில் நிர்மாணித்த வீட்டுத் திட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் முற்றுப்பெறாத வீடுகள் பல உள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 2,691 வீடுகள் உள்ளன, இவற்றை பூர்த்தி செய்ய 1492.4 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் 2678 வீடுகள் முற்றுப்பெறாது உள்ளது, அதற்கு தேவையான 1,233 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,313 வீடுகள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. அதற்காக 261.5 மில்லியன்கள் தேவைப்படுகின்றது. மொத்தமாக 6,682 வீடுகள் மூன்று மாவட்டங்களிலும் முற்றுப்பெறாதுள்ளது. இவற்றை முழுமைப்படுத்த 2,987.53 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றது.
எனவே தற்போதைய பிரதமருடன் இதே கேள்வியை எழுப்பி இதற்கான தீர்வு என்னவென கேட்ட வேளையில் 2021 ஆம் ஆண்டு முடிய முன்னர் குறித்த வீடுகளுக்கான நிதியை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.
இந்த மூன்று மாவட்டங்களில் மாத்திரம் அல்லாது வடக்கி கிழக்கில் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்ற பிரச்சினை உள்ளது. எனவே எப்போது இந்த வேலைத் திட்டத்திற்கான நிதி வழங்கப்படும். 6,682 குடும்பங்கள் இன்று நடுத்தெரிவில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விரைவாக எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒரு வீட்டுத் திட்டத்திற்கு 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் தரம் குறைக்கப்பட்டு 6 இலட்சம் ரூபாய்கள் என்ற ரீதியில் வழங்கப்படுகின்றது என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த வன்னி மாவட்டத்தில் மன்னாரில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ள 1,600 வீடுகளில் 100 வீதம் எவரும் குடியேறவில்லை. இது குறித்து கருத்தில் கொள்ளவேண்டும்.
சார்ள்ஸ் எம்.பி இது 2010 ஆம் ஆண்டில் ரிஷாத் பதியுதீன் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள். நான் கேட்பது 2018-2019 ஆம் ஆண்டுகளில் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கு பணம் வழங்கப்படுமா என்பதே?
இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இது குறித்து வீடமைப்பு அதிகார சபை ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. உண்மையில் இந்த இடங்களில் உரிமையாளர்கள் யார், உறுதிப்பத்திரம் உள்ளதா என்பதை ஆராய்கின்றோம். அதேபோல் நிறுத்தபட்டுள்ள வீட்டுத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சார்ள்ஸ் எம்.பி 2021 ஆம் ஆண்டு இறுதிக்கும் இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதியை வழங்குவதாக பிரதமர் எமக்கு வாக்குறுதி வழங்கினார். இது குறித்து நாம் முரண்படாது எமது மக்களுக்கான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்போம்.
இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பிரதமர் வாக்குறுதி வழங்கினார் என்றால் அது ஒருபோதும் மீறப்படாது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாமே வடக்கு மக்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றோம். 2015 ஆம் ஆண்டில் எம்மை வீழ்த்தினாலும் நாம் எப்போதும் நன்மை செய்கின்றோம். எனவே 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறித்த வீட்டுத் திட்டத்திற்கான நிதியை பெற்றுத் தருவதாக பிரதமர் கூறுகின்றார்.
எமக்கு நீங்கள் வாக்கு வழங்காவிட்டாலும் கூட நாம் உதவிகளை செய்வோம், நீங்கள் வாக்களித்து உருவாக்கிய ஆட்சியில் சஜித் உங்களுக்கு உதவிகளை செய்யவில்லை. ஆனால் நாம் எப்போதும் தமிழ் மக்களுக்கு உதவிகளை செய்வோம். உங்களுக்கும் அது நன்றாக தெரியுமே. அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
சார்ள்ஸ் எம்.பி நன்றி பிரதமர் அவர்களே, அமைச்சர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்துவதாக இப்போதும் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு நன்றி என்றார்.
No comments:
Post a Comment