பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு கடமையாற்றிய வைத்தியரும் பிசிஆர் மாதிரி பெறப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
இன்று (8) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு கடமையாற்றிய வைத்தியரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் குறித்த தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றிய ஏனைய உத்தியோகத்தர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பரிசோதனை கிடைக்கப் பெறும் பட்சத்தில்தான் சாதாரண நடைமுறையில் விடுவதாக அல்லது தனிமைப்படுத்தலை நீடிப்பதா என்பதை தீர்மானிக்க முடியும்.
கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் அக்கரைப்பற்று நீர்ப்பாசன இலாக்காவில் பணியாற்றுபவர். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினுள் முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது தொடர்பாடலில் 50 பேரை இனங்கண்டு பிசிஆர் பரிசோதனை எடுத்துள்ளோம். இதுவரை முடிவுகள் கிடைக்கவில்லை. கிடைக்கும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் தரப்படும். மேற்கூறிய நபர்கள் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment