இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான, முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையமான, 'தம்பபவனீ' மின்னுற்பத்தி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வுத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) முற்பகல் மன்னாரில் இடம்பெற்றதோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கமைய, தேசிய மின்கட்டமைப்பில் 103.5 மெகா வாற்று (103.5MW) மின்வலு இணைக்கப்படுகின்றது.
மன்னாரின் தெற்கு கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த காற்றாலை மின்னுற்பத்தி பூங்காவில், 30 காற்றாலை கட்டமைப்புகள் நிர்மாணிகக்ப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு காற்றாலை கட்டமைப்பும், 3.45MW மின்சாரத்தை வழங்கும் என்பதோடு, 30 கட்டமைப்பைக் கொண்ட முழு மின்னுற்பத்தி நிலையத்தினாலும், 103.5MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மின்னுற்பத்தி நிலையமானது, வருடாந்தம் , 380 மில்லியன் அலகிற்கும் அதிகமான மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு வழங்கக் கூடியது.
இதன் மூலம் மணித்தியாத்திற்கு ஒரு கிலோ வாற்று மின்சார உற்பத்திக்க்கு 5 சத டொலரிலும் (5.0 US Cents/0.05 USD) குறைவான செலவே (5.0 US Cents per kw/hr) செல்கிறது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேயளவான எரிபொருள் மூலமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது வருடாந்தம் விடுவிக்கப்படும் 285,000 மெற்ரிக் தொன் காபனீரொட்சைட்டு சூழலுக்கு விடுவிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு, அதற்கு செலவாகும் எரிபொருளும் மீதப்படுத்தப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையிடம் வழங்கப்பட்ட மன்னார் காற்றாலை மின்சக்தி (Mannar Wind Power Project (MWPP)) திட்டமானது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட சுமார் 141 மில்லியன் டொலர் கடனுதவி மூலம் அமைக்கப்பட்டதாகும்.
இது நீண்ட கால, நிலைபேறான திட்டமென்பதோடு, இலங்கையின் பருவப் பெயர்ச்சி காற்று பாங்கினை அடிப்படையாகக் கொண்டு, அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில், சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment