(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 1000 ரூபாவாக வழங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளமையானது, முழுப் பொய்யாகும். கடந்த ஆட்சியில் எமது அமைச்சர்களினால் மக்கள் ஏமாற்றப்பட்டதை போலவே இந்த தடவையும் எமது மக்களை ஏமாற்றவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நீண்ட கால யுகத்தில் எமது நல்லாட்சியில் எந்தவொரு ஆட்சியிலும் எமது மக்களுக்கு ஒரு துண்டு நிலம் கூட வழங்கப்படவில்லை.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் 7 பேர்ச் நிலத்திற்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கினோம். நான் அமைச்சராக இருந்த காலத்திலேயே அதிகளவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனித்தனி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் வழங்கிய உறுதிப்பத்திரம் பொய்யானது அல்ல, அதேபோல் நாம் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்துள்ளோம்.
ஆனால் எமது ஆட்சியை விமர்சித்து இன்று ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாம் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
அதேபோல் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள கொடுப்பனவை 1000 ரூபாவாக வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார். உண்மையை கூறுவதென்றால் இது முழுப் பொய்யாகும்.
எமது ஆட்சியிலும் ஒரு சில அமைச்சர்கள் இவ்வாறே பொய்களை கூறினார். அதேபோல் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் கூறியுள்ளதே தவிர இந்த கோரிக்கையை கம்பனிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
அதேபோல் இவ்வாறு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும், அடிப்படை சம்பளம் ஆயிரமா? அல்லது ஏனைய கொடுப்பனவுகள் எல்லாமே சேர்த்து இந்த தொகை வழங்கப்படுகின்றதா? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நான் தோட்டப் புறங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருகின்றேன். எனவே எனக்கு உண்மை எது, பொய் எதுவென தெரியும். எனவே அரசாங்கம் எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.
அதேபோல் இன்று நாட்டில் கொவிட் வைரஸ் பரவலில் எமது மலையக பகுதிகளே அதிகளவில் அச்சுறுத்தல் பகுதிகளாக உள்ளது. எமது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தோட்டப்புறங்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment