வேறு நோய்களால் இறப்போருக்கு ஒரே நாளில் PCR பரிசோதனை நடத்தி சடலத்தை கையளிக்க விசேட முறைமை - முஜீபுர் ரஹ்மான் முன்வைத்த விடயம் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

வேறு நோய்களால் இறப்போருக்கு ஒரே நாளில் PCR பரிசோதனை நடத்தி சடலத்தை கையளிக்க விசேட முறைமை - முஜீபுர் ரஹ்மான் முன்வைத்த விடயம் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராய்வு

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தி சடலத்தை கையளிக்க விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

வேறு நோய்களினால் இறப்பவர்களின் சடலங்கள் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு நான்கைந்து நாட்களின் பின்னரே உறவினர்களிடம் கையளிக்கப்படுவது தொடர்பில் சுகாதார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் முஜீபுர் ரஹ்மான் முன்வைத்த விடயத்தை ஆராய்ந்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஒரே நாளில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தி சடலங்களை கையளிக்க அடுத்த வாரம் முதல் அலுவலகமொன்றை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார். .

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கொரோனாவுடன் தொடர்புள்ள பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

கொரோனாவினால் இறப்பவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு இரண்டரை நாட்களுக்கு பின்னரே அறிக்கை கிடைக்கிறது. அறிக்கை நெகடிவ் ஆக இருந்தாலும் கூட உடனடியாக சடலம் கையளிக்கப்படுவதில்லை. அதற்கும் ஓரிரு நாட்களின் பின்னர்தான் சடலம் கையளிக்கப்படுகிறது. அழுகிய நிலையில் சடலங்கள் வழங்கப்படுவதால் உறவினர்கள் பெரும் அசௌகரியத்திற்கும் மன வேதனைக்கும் உள்ளாவதாக முஜீபுர் ரஹ்மான் எம்.பி இங்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை கொத்தணியாக உருவாகி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை குழுவில் பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இந்தத் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் கிராமிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய ரீதியில் கொவிட்19 தடுப்புக் குழுக்கள் செயற்படாமை சிக்கலுக்குரியதென இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்ததுடன், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிராந்திய ரீதியான கொவிட் தடுப்புக் குழுக்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

PCR பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

நாளொன்றுக்கு 400 ரெபிட் அன்ரிஜென் பரிசோதனைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. இதனை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நான்கு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினர். 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் தொற்று நோய் உடையவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவது பொருத்தமானது என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததுடன், இதற்கு சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்தார்.

தற்பொழுது மாகாண சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகம் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இங்கு சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad