ஹற்றன் நகரில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அவர்கள் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லையென அம்பகமுவ பொது வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட பதில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ். காமதேவன் தெரிவித்தார்.
இதையடுத்து தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்பட்டிருந்த ஹற்றன் - டிக்கோயா நகரத்திலுள்ள, கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட மீன் சந்தைப்பகுதி, சைட் வீதியின் நுழைவாயில் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் நேற்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த 25 ஆம் திகதி ஹற்றன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதியானதையடுத்து ஹற்றன் மார்கட் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருடன் தொடர்புடைய 10 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
குறித்த 10 பேருடன் தொடர்புடைய 400 பேர் வரையில் தத்தமது வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டு அதில் 40 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோன தொற்று இல்லை என அறிக்கை கிடைக்கப் பெற்ற நிலையிலே நேற்று ஹற்றன் டிக்கோய - நகர கடைகளை திறக்க பொது சுகாதார பரிசோதகர்களும் ஹற்றன் - டிக்கோயா நகர சபையும் நடவடிக்கை எடுத்தது.
எனினும் ஹற்றன் மார்கட் பகுதியிலுள்ள கடைகளை வர்த்தகர்கள் நேற்று திறக்க முற்படுகையில் பொது சுகாதார பரிசோதகரினால் அதற்கு அனுமதி வழங்காததையடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது .
ஆயினும் தொடர்ந்து மார்கட் பகுதியை மூடுவதற்கு பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஏனைய வர்த்தக நிலையங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறக்க அனுமதிக்கப்பட்டதுடன் ஹற்றன் - டிக்கோயா நகர சபையினால் நகருக்கு வரும் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோன தொற்று மீண்டும் ஏற்படும் பட்சத்தில் ஹற்றன் - டிக்கோயா நகர வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனவும் பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி முதல் கொரோனா தொற்று காரணமாக ஹற்றன் - டிக்கோயா நகரம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் அறிவிக்கப்பட்டது .
ஹற்றன் விசேட,நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்
No comments:
Post a Comment