20இற்கு வாக்களித்தோர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம் - இல்லாவிடில் ஹக்கீம், ரிஷாத் நாடகமாடுவதாக சந்தேகம் எழும் : எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

20இற்கு வாக்களித்தோர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம் - இல்லாவிடில் ஹக்கீம், ரிஷாத் நாடகமாடுவதாக சந்தேகம் எழும் : எம்.ஏ.சுமந்திரன்

20ஆவது திருத்தத்திற்கு சார்பாக வாக்களித்த 08 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும், அந்தந்த கட்சிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரே முன்னிலையாகி வாதாடினார். ஆனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் ’20’ இற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

அவர்களுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாட்டும் நாடகமாடுகின்றனர் என்ற சந்தேகமும் எழும்.

அதுமட்டுமல்ல அவர்களின் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையும் ஏற்படும். 20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்த குமார் எம்.பிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கின்றோம்.என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

யாழில் (30) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அணியாக, 20ஆவது திருத்தத்தை எதிர்த்திருந்தாலும் கூட, துரதிஷ்டவசமாக எதிரணியிலிருந்த 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் சார்பாக வாக்களித்ததன் காரணமாகத்தான், 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்ற முடிந்தது.

இது ஒரு துரதிஷ்டவசமானது, இது ஜனநாயக விரோத நகர்வு, சார்பாக வாக்களித்தவர்கள் கூட, மக்கள் மத்தியில் எந்தவித கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை. எவ்வாறு ஆதரிக்கப்போகின்றோம் என்றும் கூறவில்லை. 

ஆகையினால், இந்த வாக்களிப்பிலே, சார்பாக வாக்களித்தவர்கள் தவறான ஒரு செயலைச் செய்துள்ளார்கள். மக்கள் அவர்களுக்கு கொடுத்த ஆணைக்கு மாறாக செயற்பட்டுள்ளார்கள். அவர்களுடைய அரசியல் கட்சிகள், அவர்களுக்கு எதிராக மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை என்றார்.

யாழ்ப்பாணம் நிருபர்

No comments:

Post a Comment