சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள முடியாவிட்டால், அவர் பதவியிலிருந்து விலக வேண்டுமே தவிர தனது உயிரைத் தியாகம் செய்யத் தயார் என்று கூறத் தேவையில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மத நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.
இதனால் அது குறித்து அவர் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதன்போது தனது உயிரை தியாகம் செய்வதனூடாக கொரோனா வைரஸை இல்லாதொழிக்க முடியுமென்றால், அதற்கும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
'கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும். மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத் தேவையில்லை. உயிர்த் தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment