ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா அச்சுறுத்தல் - ஸ்கைப் ஊடாக தொடர்புகொள்ள அனுமதி மறுப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

ரிஷாத் பதியுதீனுக்கு கொரோனா அச்சுறுத்தல் - ஸ்கைப் ஊடாக தொடர்புகொள்ள அனுமதி மறுப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் சார்பில் ஆணைக்குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக்குழுவுக்கு இன்று அறிவித்தார்.

தனது சேவை பெறுநரான ரிஷாத் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிரைச்சலையில் ஈ பிரிவில் 10 ஆவது கூண்டுக்கு அருகில் உள்ள 9 ஆவது கூண்டிலிருந்து கொவிட்-19 வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டினார்.

குறித்த தொற்றாளர் கந்தக்காடு கொவிட்-19 சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக் கைதிகளில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆணைக்குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

எவ்வாறாயினும் அவ்வாறு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாத் பதியுதீனுக்கு ஆணைக்குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad