சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக விடுதலை செய்யுங்கள் - இங்கிலாந்து - வேல்ஸிற்கான மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக விடுதலை செய்யுங்கள் - இங்கிலாந்து - வேல்ஸிற்கான மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வலியுறுத்தல்

(நா.தனுஜா)

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக விடுதலை செய்வதன் ஊடாக சட்டத்தின் ஆட்சியையும் சர்வதேச சட்ட வரையறைகளுக்கு கட்டுப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி தமது தொழிலை முன்னெடுப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கான மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வலியுறுத்தியிருக்கிறது.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கைது மற்றும் தடுத்து வைப்பு தொடர்பில் அந்த ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குறித்து வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறிகின்றோம். அவர் அரசாங்கத்திற்கு எதிரான, அரசியலமைப்புடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்திருப்பதுடன் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் செயற்பட்டு வந்திருக்கிறார். அவரது முற்போக்கான, சீர்திருத்தவாத சிந்தனைகளுக்காக அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் அவரைக் கைது செய்தமைக்கான காரணங்கள் எவையும் அவரது குடும்பத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமான காலம் எவ்வித விசாரணைகளுமின்றி, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாமல், முறையான சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்படாமல் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

அவரைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவு கடந்த அக்டோபர் 14 ஆம் திகதி மீளப்புதுப்பிக்கப்பட்டதுடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அவரது வழக்கு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பிற்போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதனூடாக சட்டத்தின் ஆட்சியையும் சர்வதேச சட்ட வரையறைகளுக்குக் கட்டுப்படுவதையும் உறுதி செய்யும் அதேவேளை, இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் அனைவரும் தமது தொழிலை எவ்வித அச்சுறுத்தல்களும் கண்காணிப்புக்களுமின்றி மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment