மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை தெற்கு பகுதிகளுக்கு அதி அவதானம் காட்டுங்கள் - கொழும்பு கொரோனா ஒழிப்பு கூட்டத்தில் மனோ கணேசன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை தெற்கு பகுதிகளுக்கு அதி அவதானம் காட்டுங்கள் - கொழும்பு கொரோனா ஒழிப்பு கூட்டத்தில் மனோ கணேசன்

கொரோனா என்பது இன்று சுகாதார பிரச்சினை மட்டுமல்ல. இன்று அது பொருளாதார பிரச்சினை ஆகிவிட்டது. அதாவது நாட்டு பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கி, தொழில் இழந்து வாழும் மக்களின் வீட்டு பொருளாதார பிரச்சினையும் ஆகி விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட கொரோனா தொற்று தொடர்பில் சந்திக்கும் சுகாதார மற்றும் வாழ்வாதார உதவித் தொகை பெறும் சிக்கல்கள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில், கொழும்பு மாவட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டு, இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மனோ கணேசன் எம்பி இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று கொழும்பு மாநகரில், பன்னிரண்டு பொலிஸ் வலயங்களும், ஆறு தொடர்மாடி குடியிருப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்குள்ளே வாழும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூபா. பத்தாயிரம் வழங்குகிறீர்கள். 

அதேவேளை முடக்கல் காரணமாக, நாளாந்த வேலை, சுய தொழில், கூலித் தொழில் ஆகியவை காரணமாக நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகி இருப்போருக்கு ரூபா. ஐயாயிரம் வழங்குவதாக சொல்கிறீர்கள். இவை முறையாக வழங்கப்படுவதில்லை.

இத்தகைய குறைவருமான, நாளந்த வருமான குடும்பங்கள் எதுவென பெரிய ஆய்வு குழுக்களை அமைத்து தேடாதீர்கள். இந்த பகுதிகளில் வாழும் பெரும்பாலோர் அன்றன்று உழைத்து சம்பாதித்து வாழ்பவர்கள். இவர்களுக்கு அடுத்த நாளைப்பற்றி கவலைப்பட்டு சேமித்து வைக்க வருமானம் இல்லை. 

ஆகவே ஒவ்வொரு நாளும் உழைத்து வாழும் இந்த உழைப்பாளிகள் இன்று வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கிறார்கள். ஆகவே தாமதிக்காமல், இவர்களுக்கு உடனடியாக வீடு வீடாக சென்று வாழ்வாதாரம் வழங்குங்கள். 


சுகாதார பிரச்சினையை பார்த்தால், இன்று முழு நாட்டில், கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகரில் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள முதல் மூன்று வட்டாரங்கள் மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை தெற்கு ஆகியவைதான். ஆகவே இவைதான் இன்று முழு இலங்கையிலும் அதிக பாதிப்புக்கு உள்ளான வட்டாரங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

ஆகவே இங்கேதான், அதிக பீசிஆர் பரிசோதனைகள், அதிக சுகாதார கவனிப்புகள், அதிக பொருளாதார வாழ்வாதார வழங்கல்கள் இடம்பெற வேண்டும். இவற்றுக்கு அதிக அவதானம் காட்டுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad