ஜோ பைடனின் வெற்றி சிறுபான்மையினரை அனுசரித்துபோகும் ஒரு தலைவர் உலகில் இருக்கிறார் என்ற செய்தியை சொல்லியுள்ளது - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

ஜோ பைடனின் வெற்றி சிறுபான்மையினரை அனுசரித்துபோகும் ஒரு தலைவர் உலகில் இருக்கிறார் என்ற செய்தியை சொல்லியுள்ளது - இராதாகிருஷ்ணன்

மதசார்பற்ற, சிறுபான்மையினத்தவர்களையும் அரவணைத்து பயணிக்ககூடிய ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (08) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு மலையக மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது, "அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். மத சார்பின்றி, சிறுபான்மையினம் - பெரும்பான்மையினம் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் மக்களின் நன்மதிப்பை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, கருப்பினத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் பெரும்பான்மையின மக்களும் அவருக்கு வாக்களித்தனர். அனைவரையும் அனுசரித்தே ஒபாமாவின் பயணம் அமைந்தது. 

அதேபோல் ஜே பைடனும் சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துக் கொண்டே முன்னோக்கிச் செல்வார். அனைத்து இன மக்களும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல ஜோ பைடனின் வெற்றி என்பது சிறுபான்மையின மக்களை அனுசரித்து போக வேண்டிய ஒரு தலைவர் உலகில் இருக்கிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மதசார்பற்ற, சிறுபான்மையின மக்களை புறந்தள்ளாது செயற்படும் நபரே ஜோ பைடன் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான மாறுதல்கள் ஏற்படலாம். அதாவது மதசார்பற்ற, மொழிபேதமற்ற தலைவர்களை மக்கள் மதிக்ககூடிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment