பஷில் பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை - முஸ்லிம் மக்களின் உரிமை தடுக்கப்பட்டுள்ளது : வீ.இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

பஷில் பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை - முஸ்லிம் மக்களின் உரிமை தடுக்கப்பட்டுள்ளது : வீ.இராதாகிருஷ்ணன்

பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை. சிறப்பாக சேவையாற்றக் கூடிய அவர் சபைக்கு வந்தால் அனைவருக்கும் சேவைகளை வழங்குவார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு, "இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கான தடை 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டுள்ளது. பஷிலிற்காகவே இந்த சரத்து உள்வாங்கப்பட்டது. பஷில் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசியப்பட்டியலிலும் இடம்பெறவில்லை. 

எனவே, அவர் பாராளுமன்றம் வருவதற்கு சட்ட ரீதியாக பிரச்சினை உள்ளது என அறியமுடிகின்றது. அதனை நிவர்த்தி செய்துகொண்டு அவர் வரலாம். அவ்வாறு வந்தால் அதற்கு நாம் ஆட்சேபனை வெளியிடப்போவதில்லை.

இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் தொடரும்.

மேற்படி முடிவை மீள்பரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் மத உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment