மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வரவு செலவு திட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வரவு செலவு திட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொவிட்-19 பிரச்சினையால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வரவு செலவு திட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை. என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கின்றபோது ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முடியுமானவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆட்சியாளர்கள் கோபம் கொள்ளக்கூடாது. 

மக்களின் தேவைகளை, குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கே நாட்டுக்கு அரசாங்கம் ஒன்று இருக்கின்றது.

கொவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. எமது நாட்டில் அதிகமானவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கை செலவுக்காக மக்கள் கஷ்டப்படுகின்றனர். வியாபார நிலையங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. பினான்ஸ் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறான எந்த திட்டமும் வரவு செலவு திட்டத்தில் இல்லை.

இந்த பிரச்சினைகளை வெற்றி கொண்டு முன்னுக்கு செல்ல சர்வதேச நாடுகள் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாங்கள் அதிலிருந்து மீண்டு முன்னுக்கு செல்ல எடுக்கும் எந்த முயற்சியும் காண்பதற்கில்லை.

அதனால் தொடர்ந்தும் நாங்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட்டு, நவீனத்துவத்துக்கு செல்ல வேண்டும். பிரிவினைவாத அரசியலில் இருந்து விடுபட வேண்டும். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும், அவரை சம்பிரதாய, பிரிவினைவாத அரசியல் வட்டத்துக்குள் இருக்கியிருப்பதை காண முடிந்தது. இது மிகவும் துரதிஷ்டவசமாகும். 

ஏனெனில் பிரிவினைவாத அரசியலால் மக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. அதேபோன்று ஏகாதிபத்திய போக்கு மற்றும் பழிவாங்கும் அரசியலில் இருந்து நாங்கள் விடுபட்டு நடக்க வேண்டும். அதன் மூலமே நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியும் என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad