ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கிய மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதியளித்தது அமெரிக்கா - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கிய மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதியளித்தது அமெரிக்கா

இரண்டு 'ஆன்டிபாடி'களின் கலவையான ரீஜெனரான் மருந்து கொரோனாவுக்கு காரணமான கிருமியுடன் பிணைந்து அதற்கு எதிராகப் போரிடுகிறது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. 

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ரீஜெனரான் ஆன்டிபாடி சிகிச்சையை அவசர தேவைக்கு பயன்படுத்தும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

ரீஜெனரான் நிறுவனத்தின் REGN-COV2 தடுப்பு மருந்து இரண்டு 'ஆன்டிபாடி'களின் கலவை ஆகும். அவற்றில் ஒன்று கொரோனாவுக்கு காரணமான கிருமியுடன் பிணைந்து அதற்கு எதிராகப் போரிடுவதுடன், கொரோனாவுக்கு காரணமான கிருமி மனித செல்லுக்குள் செல்வதைத் தடுக்கிறது. மற்றொன்று நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையை இந்த மருந்து குறைத்தது கண்டறியப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படாமல் ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.

இந்த மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை முறைகளை அங்கீகரிப்பது புறநோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதைத் தவிர்க்கவும், நமது சுகாதாரப் பாதுகாப்பு முறை மீதான சுமையைத் குறைக்கவும் உதவும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையாளர் ஸ்டீபன் ஹான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad