நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக கூறப்பட்ட சந்தேக நபரின் மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை கடுவல பதில் நீதிவான் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகளை அரச சட்ட வைத்தியர் சன்ன பெரேரா மேற்கொண்டார்.
அதற்கமைய குறித்த மரணம் தூக்கிட்டு கொண்டமையின் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.
எனினும் அப்போது கடமையில் இருந்த பொலிஸாரின் கவனக் குறைவின் காரணமாகவே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதினால், அவர்களுக்கு பொலிஸ் ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment