மேல் மாகாண மக்களுக்கு மீண்டும் ரூபா 5,000/= நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கும், நாடு முழுவதிலும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூபா 10,000/= நிவாரண பொதியை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாணத்தில் உள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரங்களை இழந்த நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 5000/= கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று அதாவது சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூபா 10,000/= நிவாரணப் பொதி ஒன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிவாரணத்தை வழங்கும் பணிகள் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள். கிராம உத்தியோகத்தர்கள், கிராம குழக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் ஒருங்கிணைப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று, மேல் மாகாணத்தில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதலானவற்றை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நடைமுறையொன்றை இக்காலப்பகுதியில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு எந்த வகையிலும் தடை ஏற்படாத வகையில் தமது அலுவல்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment