(எம்.நியூட்டன்)
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களின் பதிவிலக்கங்களை பொதுமக்களின் பார்வைக்கு தெரிய வைக்குமாறு வட மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு வாரங்களில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியே வருகை தந்துள்ளார்கள் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த தொற்றாளர்களுடன் பயணம் செய்வர்களை அடையாளம் காண்பதற்கு இலகுவாக பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகள் முச்சக்கர வண்டிகள் போன்வற்றின் பதிவு இலக்கங்களை வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இலகுவாக அடையாளப்படுத்துவதற்கு ஏற்ப காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
நேற்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைவரும் தாங்கள் சென்று வருகின்ற வாகனங்களின் பதிவு இலக்கங்களை ஞாபகப்படுத்தி வைத்திருக்கவும் குறித்து வைத்திருக்கவும் தொலைபேசியில் படம் பிடித்து வைத்திருக்கவும் வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
இதேவேளை கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்காக மாவட்டவாரியாக அமைக்கப்பட்டு வருகின்ற வைத்தியசாலைகளில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வைத்தியசாலை இன்று மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளது.
அத்தோடு கிளிநொச்சிக்கான வைத்தியசாலை 200 படுக்கைகளுடன் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும்
அதேவேளை வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 50 படுக்கைகளுடன் திறக்கப்பட்ட வைத்தியசாலையில், நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று மட்டும் 15 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் கம்பஹா திரும்பியுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment