இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமருடன் சந்திப்பு - பேசிய விடயங்கள் என்ன...? - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமருடன் சந்திப்பு - பேசிய விடயங்கள் என்ன...?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2020.11.27) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வழங்கினார்.

கொவிட்-19 தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைக்கு பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது எனத் தெரிவித்ததுடன், தொற்று நிலைமைக்கு மத்தியிலும் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை இணையத்தின் ஊடாக காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அஜித் தோவால் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலை வாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் தோவால் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன், பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள் முன்மொழிந்தார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் தோவால் அவர்கள், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கௌரவ பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment