மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நந்தினி ஸ்டான்லி டி மெல் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதன்போது மன்னார் மாவட்ட செயலகத்தினால் புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தி, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என நந்தினி ஸ்டான்லி டி மெல் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும், மன்னார் பிரதேச செயலாளராகவும், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார்.

யுத்த சூழ்நிலையான கால கட்டத்திலும், திடீர் அனர்த்த பாதிப்புக்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவும் பகலும் அயராது பாடுபட்டார். அரச பணிகளுக்கு அப்பால் மனிதநேயத்துடனும் சேவையாற்றினார். அறிவு, ஆளுமை, வல்லமை, நிர்வாக திறமை, நீதி நடுநிலை, நேர்கொண்ட செயல் திறன், விவேகம், துணிவு கொண்ட ‘வீர பெண்மணியாக’ தனது கடந்த கால பணிகளை மேற்கொண்டார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் மன்னார் மாவட்ட மக்களுக்காக பணி செய்யக்கூடிய ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மன்னார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment