புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை விரைவில் அனுப்புவோம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை விரைவில் அனுப்புவோம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

(ஆர்.ராம்)

இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து படிப்படியான முன்னோக்கி செல்லுதல் என்பதை மையப்படுத்திய முன்மொழிவொன்றை புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் முன்மொழிவு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இணைந்து கொண்டது. 

அன்றிலிருந்து தற்போது வரையில் இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டதும் நடைமுறைச்சாத்தியதுமான 13 ஆவது திருத்தச் சட்டத்தினை தீர்வாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்திருக்கின்றது.

தற்போது அந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. நாம் அதிகார பரவலாக்கத்தின் முதற்படியாக மாகாண சபை முறைமையையே பார்க்கின்றோம். ஆகவே நாம் அதனை அடியொற்றியே எமது முன்மொழிவினைச் செய்யவுள்ளோம்.

வெறுமனே உணர்ச்சி ஊட்டி அரசியல் செய்வதை விடவும் நடைமுறைச் சாத்தியமான விடயங்களை பெற்றுக் கொண்டு அவற்றை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்வதை எமது அணுகுமுறையும் ஆகும்.

ஆகவே ஏனைய தமிழ் தலைமைகளைப் போன்று போலித் தமிழ்த் தேசியம் பேசி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களை முன்வைத்து வீணான குழம்பங்களை ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் முயலப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

அந்த வகையில், எமது கட்சி விரைவில் அந்த முன்மொழிவினை நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்குழுவிற்கு அனுப்பி வைக்கவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment