பிணைக் கோரிக்கை நீதவான் நிராகரிப்பு - ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

பிணைக் கோரிக்கை நீதவான் நிராகரிப்பு - ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானினால் குறித்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியதன் மூலம், தேர்தல் விதி மீறல் மற்றும் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூவர், இவ்வழக்கின் பிரதான சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி அதிகாலை தெஹிவளையில் உள்ள எபினேசர் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்றில் வைத்து ரிஷாட் பதியுதீன் எம்.பி. கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment