தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவோர் பொது சுகாதார பரிசோதகரிடம் அனுமதி பெற வேண்டும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவோர் பொது சுகாதார பரிசோதகரிடம் அனுமதி பெற வேண்டும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியாவசிய சேவைகளின் நிமித்தம் வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 27 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவிகளும், கம்பஹா மாவட்டத்தில் 10 பொலிஸ் பிரிவிகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகளும் மற்றும் கேகாலை மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை குளியாப்பிட்டி பகுதியில் சில கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனிமைப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வெளி பகுதிகளில் இருப்பவர்கள் எவருக்கும் இந்த பிரதேசங்களுக்குள் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

எனினும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களாயின் இவர்கள் அந்த பணிகளுக்காக வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்காக பொது சுகாதார பரிசோதகர்களிடம் அனுமதியைப் பெற்றுக்கொண்டு செல்ல முடியும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வழமையைப்போன்றே அத்தியாவசிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்களுக்காக பொருட்கள் மற்றும் ஔடத விநியோகங்களும் வழமையைப் போன்றே இயங்கி வருகின்றன.

இதேவேளை இந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பிரதான விதிகளை பயன்படுத்தும் சாரதிகள் எக்காரணம் கொண்டும் அந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த முடியாது. அவ்வாறு எவரேனும் நிறுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இந்த பகுதிகளில் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad