மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் காரியாலயத்தை திறந்துவைத்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் முழு முயற்சிகளை நாம் எடுப்போம்.
உலகளாவிய ரீதியில் இன்று பிரச்சனையாகவுள்ள கொரோனா தொற்று நோயானது இலங்கையையும் பாதித்திருந்தது. அதன் முதற்கட்டத்தை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டிருந்தோம். அந்த நம்பிக்கை மற்றும் அதன் பாதிப்புக்கள் குறைவடைந்தமையால் எமது மக்கள் கவனயீனமாக இருந்துவிட்டார்கள்.
எனினும் வருங்காலத்தில் விரைவான நடவடிக்கை எடுத்து இந்த தொற்றை நாம் நிச்சயம் கட்டுப்படுத்துவோம். அத்துடன் பாதிப்புகள் ஏற்பட்டவர்களிற்கு அதிலிருந்து மீண்டுவருவதற்கான திட்டங்களையும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்துவோம்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கம் இலங்கையின் இருப்பை கேள்விக்குட்படுத்துமா என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு,
ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே பல்வேறு முடிவுகளை எடுப்பர். அதுபோல எமது நாட்டின் நலன்களை முன்னிறுத்தி அதனை பாதுகாத்தே எமது முடிவுகளை எடுப்போம்.
எங்களைப்போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றது. எனினும் எமது ஜனாதிபதியும், பிரதமரும் கடந்த கால ஆட்சியாளர்கள் போல நடந்துகொள்ளாமல் மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், நாட்டின் தனித்துவத்தை பேணி உதவிகளை பெறும் நாடாக இலங்கை இருக்கும்.
இருபதாவது திருத்தத்தை உருவாக்குவதற்காக பலநாட்கள் கூடிய பாராளுமன்றம் தற்போது எதிர்வரும் 3 ஆம் திகதி மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே கொரோனாவை சாட்டி அரசின் நிகழ்ச்சிநிரலிற்காக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறதா என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு.
அப்படியல்ல மக்களினுடைய நலன் மற்றும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே சகல முயற்சிகளும் எடுக்கப்படும், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. என்றார்
அலுவலக திறப்பு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment