செய்தியை தொடர்ந்து முல்லைத்தீவில் ஆபத்தான வீதியோர மரங்கள் அகற்றப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

செய்தியை தொடர்ந்து முல்லைத்தீவில் ஆபத்தான வீதியோர மரங்கள் அகற்றப்பட்டது

வெளியான செய்தியைத் தொடர்ந்து வீதியோரத்தில் காணப்படும் மரங்களை அகற்றும் பணியில் அரச மரக்கூட்டுத்தாபனம் ஈடுபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

குறிப்பாக அண்மைக்கலாமாக கனமழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து வீழ்ந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதி ஓரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்ததாகவும் தெரிவித்து, வீதியோரத்தில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வீதிகளின் ஓரங்களிலும் இவ்வாறான மரங்கள் காணப்படுகின்றதாகவும் அவற்றை அகற்றுமாறும் அதேவேளையில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கும் 20ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கும் இடையில் மிக ஆபத்தான நிலையில் இருக்கின்ற குறித்த மரத்தையும் மிக விரைவில் அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னணியில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீற்றருக்கும் இருபதாவது கிலோ மீற்றருக்கும் இடையில் மிக ஆபத்தான நிலையில் இருந்த மரத்தினை அரச மரக்கூட்டுத்தாபனத்தினர் இன்று காலை அகற்றியதோடு, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காணப்படும் இவ்வாறான மரங்களை அகற்றும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணியினை விரைந்து மேற்கொண்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  இதேபோன்று ஏனைய வீதிகளிலும் உள்ள ஆபத்தான மரங்களையும் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

(மாங்குளம் நிருபர் - ஷண்முகம் தவசீலன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad