தமிழர்கள் சர்வதேசத்தை நாடும் போது சிங்களவர்கள் அரசை வலுப்படுத்துகின்றனர் : சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

தமிழர்கள் சர்வதேசத்தை நாடும் போது சிங்களவர்கள் அரசை வலுப்படுத்துகின்றனர் : சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார்

தமிழர்கள் அதிகளவில் சர்வதேசத்தினை நாடிச் செல்கின்றபோது உள்நாட்டில் தமிழர்களுக்கான இடம் மறுதலிக்கப்படுவது அதிகரித்துச் செல்வதுடன் சிங்களவர்களும் தமக்கான அரசாங்கத்தினை வலுப்படுத்தியே வருகின்றனர் என்று சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியான புதிய அணுகுமுறைகள் என்பதும் சிங்கள மக்களை எதிர்த்தரப்புக்குத் தள்ளும் விதமாக அமையக்கூடாது. நாம் வெளியே செல்லச்செல்ல உள்நாட்டில் நமக்கான இடம் கூடுதலான அளவுக்கு மறுதலிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

சிங்களப் பெரும்பான்மை மக்கள் என்ன வகையான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள் என்பது கடந்த தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் வெளியுலகை நாடிச் செல்லச்செல்ல அவர்கள் தமக்கான அரசை தனியே பலப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். அதை தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் செய்கிறார்கள். இதற்கு முன்பு போருக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவின் மூலமும் இதையே செய்தனர். இதை நாம் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும். 

சர்வதேச நிலைப்பாடுகளும் ஆதரவும் கொழும்பைப் பகைத்துக் கொண்டும் சிங்களச் சமூகத்தைப் புறந்தள்ளிக் கொண்டும் தமிழ் மக்களுக்குச் சார்பாக அமையப்போவதில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையும் விட சமூகப் பிளவுகளும் இனப்பிளவுகளும் முரண்களும் இன்று அதிகரித்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்? 

இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவான மாகாண சபை முறை தமக்கும் உரியது என்பதை எத்தனை வீதமான சிங்கள மக்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்? அது தங்களுக்கு எதிராக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரமான பூதம் என்றல்லவா அவர்கள் கருதிக்கொண்டிருக்கிறர்கள்.

அப்படித்தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தையும் அதனுடைய மனித உரிமைகள் பேரவையையும் தங்களுக்கு எதிராகச் சதி செய்யும் அமைப்புகள் என்றே கருதுகிறார்கள். இது அவர்களுடைய தவறான புரிதல் என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால், அரசியல் ரீதியான யதார்த்தம் அப்படித்தான் உள்ளது.

எனவே வெளித்தரப்புடன் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வது தொடர்பில் நாம் ஆழமான சிந்தனைக்கும் கற்கைக்கும் செல்ல வேண்டும்.

இதேவேளை சர்வதேச ரீதியான புதிய அணுகுமுறை என்பது, கற்றுக்கொண்ட பாடங்கள், பொறுப்புக் கூறுதல், பகை மறப்பு, மீளிணக்கம் அல்லது நல்லிணக்கம், பல்லின சமத்துவம், பன்மைத்துவம், ஜனநாயக வலுவாக்கம், சமாதானம் என்றவாறே அமையவேண்டும். இதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதாகவே வலியுறுத்தப்படுகிறது.

இதை அரசும் செய்ய வேண்டும். அரசுக்கு வெளியே உள்ள தமிழ்த்தரப்பு உட்பட அனைத்துத் தரப்பினரும் செய்ய வேண்டும் என்றே சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல்கள் உள்ளன. இந்த நிலையில் இதற்கு மாறாக புறத்தியாக வேறு எதைச் செய்யலாம்?

ஆகவே சர்வதேச சமூகம் இலங்கைத்தீவுக்கென வலியுறுத்துகின்ற அரசியல் அடிப்படைகளை மையமாகக் கொண்டு செயற்படுவோரில் நாமே முன்னிலையில் உள்ளோம். அதற்கான புதிய அணுகுமுறைகளைப் பற்றி நாம் கூடுதலாகச் சிந்திக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment