மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள பணிப் பெண்களை உடனடியாக அரசு மீட்டெடுக்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள பணிப் பெண்களை உடனடியாக அரசு மீட்டெடுக்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மத்திய கிழக்கில் குறிப்பாக குவைத் நாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கைப் பணிப் பெண்களை உடனடியாக அரசு மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 10.11.2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குவைத் நாட்டில் கடந்த 7 மாதங்களாக நிர்க்கதியாகியுள்ள தங்களை மீட்டெடுத்து துயர் துடைக்குமாறு அந்நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 70 இலங்கைப் பணிப் பெண்கள் சார்பாக அழுது மன்றாடும் காணொளியை வெளியிட்டுள்ளனர். இது உள்ளத்தை உருக்கும் விடயமாக உள்ளது.

நமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்று துயர் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது என்பதில் அன்றும் இன்றும் உறுதியாகக் குரல் கொடுத்து அதற்காக பல ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட நிறுவி வேறு வாழ்வாதார முயற்சிகளுக்கும் உதவி வருபவன் நான் என்ற அடிப்படையில் இந்தக் காணொளி எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தக் காணொளி ஜனாதிபதியின் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றே குவைத் நாட்டில் சிக்கியுள்ள நமது இலங்கைப் பணிப் பெண்கள் மன்றாடுகிறார்கள்.

எனவே மத்திய கிழக்கு நாடுகளில் அநாதரவாக கைவிடப்பட்டுள்ள நமது இலங்கைப் பெண்கள் மீட்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகளை வழங்க வேண்டும்.

குவைத் நாட்டில் சிக்கியுள்ள நமது நாட்டின் தமிழ் முஸ்லிம் சிங்கள சகோதரிகளை உடடியாக எதவித நிபந்தனைகளுமின்றி அரசு மீட்டெடுத்து ஏங்கித் தவிக்கும் அவர்களது குடும்பங்களுடன் மீள இணைக்க வேண்டும்.

தமது குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் சுகாதாரமும் பாதுகாப்பும் அற்ற நிலையிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே இது விடயத்தில் அரசு தலையிட்டு நிர்க்கதியான பணிப் பெண்களின் துயர் துடைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad