ஏழு மாதங்களுக்குப் பிறகு மக்காவில் வெளிநாட்டவர்களுக்கு உம்ராவுக்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

ஏழு மாதங்களுக்குப் பிறகு மக்காவில் வெளிநாட்டவர்களுக்கு உம்ராவுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவுக்கு வெளியிலிருந்து யாத்திரிகர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை ஏழு மாதங்களின் பின்னர் நேற்று நீக்கப்பட்டு, முதல் தொகுதி வெளிநாட்டு உம்ராஹ் யாத்திரிகர்கள் நேற்று சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

தற்போதைய மூன்றாம் கட்ட தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், 20,000 யாத்திரிகர்கள் மற்றும் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் 60,000 வழிபாட்டாளர்களுக்கு, இரண்டு புனித பள்ளிவாசல்கள் மற்றும் அவற்றின் முற்றங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

வழிபாட்டாளர்கள் இரண்டு புனித பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்பதோடு, மதீனாவில் உள்ள முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் உள்ள ரவ்தாவைப் பார்வையிடவும், நபிகள் நாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்களின் வயது 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், அவர்கள் சவுதி அரேபியாவுக்கு வந்த பின்னர் மக்காவில் தாம் தங்கியிருக்கும் இடத்தில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ராஹ் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாத்திரிகர்கள் சவுதிக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன், தங்கள் நாட்டிலுள்ள ஒரு நம்பகமான ஆய்வு கூடத்தால் வழங்கப்பட்ட PCR பரிசோதனை அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

உம்ராஹ் சடங்கை முடிப்பதற்கு யாத்திரிகர்களுக்கு தலா 10 நாட்கள் வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

வரும் அனைத்து யாத்திரிகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பெரிய பள்ளிவாசல் விவகாரங்களுக்கான பொதுத் தலைவரும் நபிகளாரின் பள்ளிவாசலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தைத் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியைப் பேணும் நடவடிக்கைகள் அனைத்து நேரங்களிலும் பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் 2,500 லீற்றருக்கும் அதிகமான, சுற்றாடலுக்கு உகந்த கிருமி நீக்கிகளைப் பயன்படுத்தி முற்றங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment