துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான இஸ்மிர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
கடல்நீரும் சுனாமி அலைகளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்த நிலநடுக்கத்தால் 300 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று முதல் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் போது பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட விபத்து மற்றும் பிற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனால், நிலநடுக்கம் மற்றும் அதுசார்ந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி தாயூப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் காரணமாக 930 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 200-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் பலரின் நிலைமை என்னவென்றே தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment