50 ரூபாவைக்கூட பெற்றுக் கொடுக்காதவர்கள் 1000 ரூபாவை விமர்சிப்பது இயலாமையே : அனுஷா சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

50 ரூபாவைக்கூட பெற்றுக் கொடுக்காதவர்கள் 1000 ரூபாவை விமர்சிப்பது இயலாமையே : அனுஷா சந்திரசேகரன்

ஆட்சியில் அங்கம் வகித்த போது 50 ரூபாவைக்கூட பெற்றுக் கொடுக்க முடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இது போட்டா போட்டியான விடயமாகவும் தொழிலாளர்கள் திருப்தியடையாத விடயமாகவும் மாறிவிட்டது.

முழு மலையகத்தையே ஸ்தம்பிக்கச் செய்து தேசிய மட்டத்தில் பல அமைப்புகளினதும் முழுமையான ஆதரவையும் பெற்று நடைபெற்ற அட்டன் சத்தியாக்கிரகப் போராட்டத்தினால்கூட சம்பள உயர்வைப் பெற முடியாமல் போய்விட்டது.

தொழிலாளர்களின் ஒற்றுமை, போராட்டங்களுக்கு அப்பால் சம்பள உயர்வை தீர்மானிப்பது கூட்டு ஒப்பந்தம் என்பதனையே இது உணர்த்துகிறது.

இதனைக்கூட விளங்கிக்கொள்ள முடியாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காகவும் மாகாண சபையில் வாரிசுகளை உள்வாங்குவதற்காகவும் உண்மையை மூடி மறைத்து பொய்யுரை ஆற்றக்கூடாது.

என் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் தலைமையை அபகரித்த ஆர்வத்தை சம்பள உயர்வுக்கான ஏதாவது போராட்டத்திலும் காட்டியிருக்கலாம். பதவி அந்தஸ்து இருக்கும்போது மக்களை மறந்துவிட்டு மாகாண சபைத் தேர்தலுக்காக உணர்ச்சிவசப்படுவது தலைமைக்கு அழகல்ல.

இன்று 1000 ரூபாவை விமர்சித்து குரல் கொடுப்பவர் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார் என்பதையும் நினைவில் வைத்து ஏமாற்றுவோர் வரிசையில் தாமும் இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் இவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.

சம்பள உயர்வு விடயத்திலும் சரி வேறு எல்லா உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் சரி இவ்வாறான ஏமாற்றும் அரசியல்வாதிகளின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் நான் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளாகும் எனவும் தெரிவித்தார்.

1000 ரூபா சம்பந்தமாக இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த போது எதுவும் செய்யாமல் இப்போது இந்த அரசாங்கம் வெளிப்படுத்தும் பிரேரணைகளுக்கு முட்டுக்கட்டையாக நிற்பது, தொழிலாளர்கள் சம்பளம் ஒரு முழுமையான தீர்வுக்கு வராததற்குக் காரணம் தொழிலாளர்களை ஏமாற்றும் தலைவர்களாலேயே ஆகும் என்பதனையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment