மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு : நிலைமை கட்டுப்பாட்டுக்குள் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு : நிலைமை கட்டுப்பாட்டுக்குள்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் உருவாகியதையடுத்து அங்கு இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோதல் சம்பவத்தில் 3 கைதிகள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அங்கு விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய நிலைவரத்தின்படி அங்கு நிலவிய பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மோதல் நிலைமையை அடுத்து அங்கு இடம்பெற்ற பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த மூவரும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் (ராகம வைத்தியசாலையில்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபர நிலையை கட்டுப்படுத்த, சிறைச்சாலை அதிகாரிகள் பலப் பிரயோகம் செய்ததாகவும், தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாகவும், இதன்போதே ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.

மஹர சிறைச்சாலையில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தமையை அடுத்து இந்த களேபர நிலைமை ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்தவே சிறைக்காவலர்கள் பலப் பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உப்புல் தெனிய சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் விஷேட பொலிஸ் குழுக்களும் அதிரடிப் படையினரும், சிறைச்சாலை அதிகாரிகளின் உதவிக்காக மஹர சிறைச்சாலை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயசின் கீழ், ராகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 5 பொலிஸ் குழுக்கள் மஹர சிறைக்கு அனுப்பட்டுள்ளன. அவர்கள் அங்குள்ள நிலைமைக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் விஷேட விசாரணைகளையும் ஆரம்பிக்கவுள்ளனர்.

இதனைவிட பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்பு படைப் பிரிவும் மஹர சிரைச்சாலை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மஹர சிறைச்சாலையை சூழ விஷேட பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். 

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டி, போகம்பறை  சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற 5 கைதிகளில் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதோடு, தப்பித்து வெளியில் சென்ற 4 பேரில் 3 பேர் உடனே கைது செய்யப்பட்டதோடு, மற்றைய நபர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். 

No comments:

Post a Comment