20 க்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெருமகிழ்ச்சி தருகின்றது, இதை பாராட்டாமல் இருக்க முடியாது - அனைத்துக் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

20 க்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெருமகிழ்ச்சி தருகின்றது, இதை பாராட்டாமல் இருக்க முடியாது - அனைத்துக் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்

(எஸ்.அஷ்ரப்கான்)

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்கிற உந்துதலை முஸ்லிம் எம்.பிக்களுக்கு அனைத்துக் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் உருவாக்கியிருந்ததென அதன் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.

20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவு வழங்கியிருப்பது குறித்து அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்திருப்பது பெருமகிழ்ச்சி தருகின்றது. இதை பாராட்டாமல் இருக்க முடியாது. தெளிந்த சிந்தனை, தூரநோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடன் செயற்பட்டுள்ளனர்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குங்கள் என அனைத்துக் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் முஸ்லிம் எம்.பிக்களை பகிரங்கமாகக் கோரியிருந்தது. இதன் மூலமாக அரசாங்கத்தின் கருணை கூர்ந்த பார்வை கிடைக்குமென்று காரணம் சொல்லியும் இருந்தது.

இத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தமைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பாணியில் விளக்கங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தந்துள்ள போதிலும், அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை வழங்கியிருக்கின்றனர் என்பதே உண்மையாகும். 

இது பெருந்தேசிய அரசியலில் மாத்திரமல்ல, முஸ்லிம் தேசிய அரசியலிலும் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வருமென்பது திண்ணமாகும். இவ்விடயத்தில் நாம் ஒரு ஊக்கியாக, உறவுப் பாலமாகச் செயற்பட்டிருக்கின்றோம் என்பதில் பெருமையடைகின்றோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment