மேல் மாகாணம் மற்றும் குளியாபிட்டி பிரதேசங்களில் உள்ள 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடர்பான ஊரடங்கு மற்றும் போக்குவரத்து மட்டுப்பாட்டுடனான தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜிர் ரோஹண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாபிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றையதினம் (01) ஊரடங்கு உத்தரவை மீறிய 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 35 வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஒக்டோபர் 04 முதல் ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்த 1,633 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 253 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், நேற்று (31) மற்றும் நேற்று முன்தினம் (30) ஆகிய இரு தினங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேணாத 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் அதி சக்தி வாய்ந்த தன்மையினால், அதன் பரவும் தன்மை அதிகம் என்பதை கருத்திற்கொண்டு, வீட்டிலிருந்து வெளியேறுவதை குறைத்தே ஆக வேண்டும் என, அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment